அல்நாசர் நினைவுகள்


   
     அல்நாசர் புரோஸ்டேட் சிக்கன் ரெஸ்டாரன்ட்க்கு முன்னால் காரை பார்க் செய்துவிட்டு அல்-நாசரின் அழகிய நினைவுகளை அசைபோட்டவனாக கண்மூடி தியானித்திருந்தேன்...

பீப் பீப்...

விண்டோஸ் போன் தியானம் கலைத்து ஓய்ந்தது.

“டியர் கஸ்டமர், அல்நாசர் இஸ்லாமிக் வங்கி தானியங்கி பணவழங்கியில் தாங்கள் பெற முயன்ற பணத்தொகை உங்கள் கணக்கில் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. நன்றி” 

இப்பிடியொரு நோட்டிபிக்கேசன் தேவையா? 

மாதக்கடைசியின் வங்குரோத்து நிலை மனதில் தோன்றி மறைந்தது. 

அல்நாசர் முன்புபோல் இல்லை. 

முன்னைய கலகலப்பில்லை.

அல்நாசர் மட்டுமல்ல முழுக் கட்டாரும் அப்படித்தான் இருக்கிறது. 

ஏலவே அனுமானித்துவிட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க தன்னை முடிந்த வரையில் மட்டுப்படுத்திக்கொண்டு மெல்லமே நகர்கிறது கட்டார்.
பெருநாள் நாட்களில் கூட ஷோப்பிங் மோல்கள் தூங்கி வழிந்தாலும் அல்நாசர் வீதி விழாக்கோலம் பூண்டிருக்கும். இப்போது ஒன்பது மணிக்கே வெறிச்சோடுகிறது. 

கட்டாரில் சாப்பாட்டுக் கடைகளுக்கு பெயர்போன இடம் அல்நாசர் வீதி. முஹம்மத் இங்கிருக்கும்போது கிட்டத்தட்ட எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்கி ஒரு பிடி பிடித்திருக்கிறோம். எந்தக் கடையில் என்ன ஸ்பெஷல் என்பது ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு எங்களுக்கு அத்துப்படி. 

நாங்கள் சாப்பாட்டுக்கு பெயர்போன கூட்டணி. வெரைட்டியாக சாப்பிடுவதில் எங்களுக்கு நிகர் நாங்களே என நினைக்கிறேன். மாத ஆரம்பத்தில் துருக்கி ரெஸ்டாரன்ட் ரேஞ்சுக்கு தொடங்குவோம். 

மாத இறுதியில் கையில் இருப்பதெல்லாம் தீர்ந்துவிட ஷவர்மா, குபுஸ் என்று வாழ்க்கை இறங்கிச் செல்லும். ஆனாலும் அதிலும் வாய்க்கு ருசியான ஷவர்மா மட்டுமே வயிற்றுக்குள் இறங்கும். 

அல்நாசரில் புரியாணி கோர்னருக்கு அருகில் லெபனீஸ் ரெஸ்டாரன்ட் ஒன்றிருக்கிறது. அந்த ரெஸ்டாரன்ட்யின் ஷவர்மாக்கு நிகரான ஷவர்மா கட்டாரில் எங்கும் கிடைக்காது என்பது என் அபிப்பிராயம். 

ரெஸ்டாரன்ட்க்குள் நுழைந்தேன். வழமையாக சலாம் கூறி வரவேற்கும் முதியவர் அங்கு இல்லை. நாலைந்து அறிமுகமில்லாத இளைஞர்கள் முகம்.
வன் மிக்ஸ்ட் ஷவர்மா என்றேன்.

சுடச்சுட பதமாக வெந்த கோழியில் சிறிதளவு வெட்டி பின்னர் அதே பதத்தில் மாட்டிறைச்சி கொஞ்சம் வெட்டி ஆவி பறக்க மயோனைஸ் தோய்த்த குபுசில் சுற்றி நீட்டும்போது கேட்டான். "இங்கேயேவா வெளியேவா?"

"வெளியே" என்றேன். 

அல்நாசரில் எங்கள் பழைய BatCaveக்கு முன்னால் காரை நிறுத்தினேன். 

BatCave For Rent என்று பேனர் தொங்கியது. 

பல நினைவுகளை உள்ளடக்கிய முஹம்மதின் பழைய இருப்பிடம் அது. 

BatCave ஐ நோக்கியவனாக ஷவர்மாவை சற்றே உயர்த்தி...  

“Mohamed!! for old times’ sake my friend”

Comments

Popular posts from this blog

August 03, 1990

Type in Tamil - Google IME