Flutter for Windows
Flutter 2.10 வின்டோஸ் இற்கான stable (நிலைத்த) பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஆன்ரொயிட், iOS, வெப் என்பவற்றையும் தாண்டி Flutter இனை பயன்படுத்தி Windows இற்கான டெஸ்க்டாப் ஆப்களை விருத்திசெய்துகொள்ள முடியும். முன்னைய காலங்களில் ஒவ்வொரு இயங்குதளத்துக்குமான ஆப்களை ஒவ்வொரு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. அதாவது வின்டோசுக்கான ஆப் இனை C#, ஆன்ரொயிட் இற்கு Kotlin, iOS இற்கு Swift இலும் நிரலாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதிலுள்ள சிக்கல் என்னவெனில் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் தேர்ச்சிபெற்ற நிரலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருப்பதும் வெவ்வேறு பதிப்புகளை வெவ்வேறு கோட்தளங்களில் மேலாண்மை செய்ய வேண்டியும் இருப்பதுவுமாகும்.
பேஸ்புக்கின் React Native, கூகிளின் Flutter போன்ற ப்ரேம்வேர்க்குகள் இந்த சிக்கலை இல்லாமலாக்கி ஒரே நிரலாக்கத்தில் பல்வகை இயங்குதளத்தில் ஒத்திசைவாக்கும் ஆப்களை எழுதும் சுதந்திரத்தை தந்தன. Flutter ஒரு படி மேலே போய் டெஸ்க்டாப் க்குமான நிலைத்த பதிப்பினை வெளியிட்டிருப்பது வின்டோஸ் உலகுக்கு இன்னும் அதிகளவான திறன்வாய்ந்த மென்பொருட்களை வடிவமைப்பதில் பங்களிப்பு செய்யும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
வின்டோஸ் ஆப் இற்கான தோற்றத்தை வடிவமைக்க ஆன்ரொயிடின் மெட்டீரியல் தோற்றத்தை நம்பியிருக்கத் தேவையில்லை. அது டெஸ்க்டாப் இற்கு மிகவும் விகாரமானது வினைத்திறன் குறைந்த அனுபவத்தையும் பார்வையாளருக்கும் தரும். மாற்றாக Flutter சமுகப் பங்களிப்பில் உருவாகியுள்ள Microsoft இன் Fluent UI தோற்றத்தை வழங்குகிறது. இது செமையான ஒரு முயற்சியாகும்.
Flutter இல் உருவாக்கும் வின்டோஸ் ஆப்களை நேரடியாக Microsoft Store இற்கோ அல்லது Installer வடிவிலோ கட்டமைத்துக் கொள்ள முடியும்.
Flutter இனால் உருவாக்கப்படும் Windows App களின் பெர்பார்மன்ஸ் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழும் அல்லவா? Dart மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் Windows App கள் நேரடியாக machine code இற்கு காம்பைல் செய்யப்படுவதால் நம்மால் மாற்றத்தை உணர முடியாதளவுக்கு சிறப்பாக இருக்கத்தான் போகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக Flutter ஆப் களுக்கான 2D அனிமேசன்களை உருவாக்க பயன்படும் Rive வின்டோசுக்கு டெஸ்க்டாப் ஆப் ஆக வந்துள்ளது. முழுக்க முழுக்க Flutter மூலம் Rive வின்டோஸ் ஆப் எழுதப்பட்டுள்ளது.
இதுவரையில் உலகின் மிகக் கூடுதலாக பயன்படுத்தப்படும் இயங்குதளமான வின்டோசுக்கு Flutter மூலம் ஆப் எழுத முடிவது நல்லதொரு வாய்ப்பாகும். அடுத்தடுத்த மாதங்களில் Flutter, MacOS மற்றும் Linux இற்கான stable பதிப்புகளை வெளியிடும் சாத்தியங்கள் தென்படுகின்றன.
சாப்ட்வேர் துறையில் காலடிவைப்பவர்கள், மாணவர்கள் மற்றும் புதிதாக சாப்ட்வேர்கள் வெளியிட விரும்பும் அனைவரும் Dart/Flutter கற்றுத் தேர்வது காலத்தின் தேவையாகும்.
Comments
Post a Comment