இனி நமது சொந்தக்காலில் நிற்போம். (பாகம் – 5)



- யஹியா வாஸித் – (கொழும்பிலிருந்து )

இது ஒரு பொற்காலம். சிறிலங்காவில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு பிரளயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமகாலம். சிறிலங்காவிற்கு வெளியே போற்றினாலும், தூற்றினாலும், ஒரு எட்டு அந்த மண்ணுக்கு போய், உடன்பிறப்புக்களை தரிசிக்கலாமா ? தரிசிக்க விடுவார்களா ? ஏதாவது நல்லது செய்யலாமா என ஒவ்வொரு மனிதாபிமானியும் ஏக்கப் பெருமூச்சுவிடும் நிகழ்காலம். ஆம் எதிர்கால இலங்கை எழ வேண்டும், அங்கு மொத்த சமூகமும் உரிமையுடன் வாழவேண்டும், வாழவிடுவோம், வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் என நாட்டின் முதல் குடிமகன், கடைசிக்குடிமகன் வரைக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் அருமையான காலமிது.

இனி மாங்குளம்தான் சிறிலங்காவின் இரண்டாவது தலைநகராம். அது வடக்கின் தலைநகராகவும் இருக்குமாம். திஸ் ஓடர் புறம் அவர் முதல்குடிமகன் என பொறுப்புள்ள வட்டாரங்கள், பொறுமையுடன் சொல்கின்றன. மூன்று வருடத்துக்குள் இது நடக்கும், வேலைகள் தொடங்கிவிட்டன என்றும் தொடர்பாளர்கள் சொல்கின்றார்கள். செய்தும் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மன்னார் முசலி கிராமத்தில் 2300 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுவிட்டன. அதில் 72 முஸ்லீம் குடும்பங்களும் அடக்கம். அவர்களுக்குரிய பொருளாதார உதவிகளும் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுச் செயலாளர் ஜனாப்.பதியுதீன் சொல்கின்றார்.More...
யார் எதைச்சொன்னாலும் மொத்ததமிழ் பேசுவோரும், அவன் அதுவாக இருந்தாலும் சரி, அதுவாக இல்லாவிட்டாலும் சரி, தமிழ் எங்கள் மூச்சாயிற்றே அது காதுக்கு மட்டும் எட்டினால் போதாது, கைக்கெட்டி, வாய்க்கெட்டி, இதயத்தை வருட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றான். இங்கு சிறிலங்காவில் பல கதவுகளையும் தட்டிய வகையில் நல்லகாலம் பொறக்கும், நல்ல காலம் பொறக்கும் என்றுதான் பொறுப்புள்ள தலைகள் சொல்கின்றன. சிங்கள இராணுவ வீரர்களின் குழந்தைகள் தமிழ் கற்கின்றன. இரண்டு வருடத்திற்கு முன் யுத்தத்தில் காலை இழந்த சிங்கள இராணுவ வீரர்கள் இருவர் ஹொரணையில் ஒரு தளபாட பெக்டரி ஆரம்பிக்கின்றனர். தளபாட பெக்டரிதான் ஊர்முழுக்க நாறிக்கிடக்கின்றதே என்று கேட்ட போது, அடுத்த வருடம் கிளிநொச்சி பகுதியில் வீடுகள் கட்டத் தொடங்குவார்கள். அப்போது தளபாடத்துக்கு நிறைய தேவையேற்படும். அதற்காகத்தான் இந்த முன் ஏற்பாடு என அடித்துக் கூறுகின்றனர். ஏதோ ஒரு பாரிய மாற்றத்திற்கான ஏற்பாடு நடப்பதனால்தானே இவர்கள் தைரியமாக பெக்டரி திறக்கின்றார்கள்.

ஆனால் நாம்தான் இன்னும் மஹிந்த பெமிலியை கிண்டிக்கிளறிக் கொண்டிருக்கின்றோம். இந்த சனியன் புடிச்ச அரசியல் கதைக்கப் போனால் எப்போதுமே இப்படித்தான், வாய் சும்மாவே இருக்க மாட்டாது, கொஞ்சம் அரசியல் கதைக்கச் சொல்லும், அப்புறம் அதில்கொஞ்சம் இறங்கச் சொல்லும், அப்புறம் அந்த மண்ணாங்கட்டி அரசியலில் கால்பதித்து ஓடச்சொல்லும், ஊரார்ர புள்ளைகளை எல்லாம் சேர்த்து கட்சிகட்டச் சொல்லும், அப்புறம் அத்தனை பேரையும் தொபுகடீர் என போட்டு விட்டு நாம் யுரோப் பாஸ்போட்டுகளுடன் யுரோப்புக்கு மலையேறி விடுவோம். ஊரான்ட பிள்ளைகள் அத்தனையும் அகதி முகாமிலும், கொடுஞ்சிறைகளிலும் வேதனை அனுபவிப்பார்கள். இப்படித்தான் மேலே படத்தில் உள்ள கே.பி.லலித் நந்திக என்ற இளைஞர் தனது 35 வயது வரை யார், யாருக்கெல்லாமோ பின்னால் திரிந்தார். பிரபல அரசியல் வாதிகளின் ஜீப்புகளுக்கு பின்னால் திரிவது முதல் அடியாளாக அலைவது வரை வாழ்க்கையின் பாதியை தொலைத்தார். உறவினர்களாலும், நண்பர்களாலும் இரண்டாம் கண்கொண்டே நோக்கப்பட்டார்.

2001ல் மொனறாகலை மாவட்டத்தில் உள்ள புத்தள கிராமத்தில் உள்ள புத்தள சேம்பர் ஒப் கொமர்ஷில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அக்கருத்தரங்குக்கு ஒரு எடுபிடியாக லலித் நந்திக என்ற அந்த இளைஞரும் வந்திருந்தார். கருத்தரங்கு முடிந்ததும், கருத்தரங்கு நடாத்த வந்தவர்களில் ஒருவரை அழைத்து தனது கண்ணீர் கதையையும், தான் சமூகத்தில் ஒரு வியாபாரியாக முன்னேற வேண்டும் என்ற அவாவையும், தனது பொருளாதார இயலாமையையும் கூறியுள்ளார். தன்னிடம் பதினெட்டாயிரம் ரூபா மட்டுமே கைவசம் உண்டு என்ற உண்மையையும் கக்கியுள்ளார்.

உலுவரிசி இருக்கை, அதாவது 15 அங்குல நீள, 15 அங்குல அகலத்தில் இரு துணிகளை எடுத்து, அதை பைபோல் தைத்து, அதற்குள் உலுவரிசியை போட்டு தைத்து இருக்கைகளில் (கதிரை, கார்சீட்) போட்டு உட்கார்ந்தால், உடம்பில் உள்ள முக்கால்வாசி நோய் பறந்துவிடும். மலச்சிக்கல், அஜீரணம், வாய்வுகள், வாதங்கள், பசியின்மை மற்றும் மூல வியாதிகளுக்கு இது ஒரு கைகண்ட இருக்கை என அவருக்கு புரியவைத்து, இரண்டு நாட்கள் அவருடனேயே உட்கார்ந்து அனைத்தையும் செய்துகாட்டியுள்ளார். அன்றே தனது அனைத்து அடாவடிகளையும் மூட்டை கட்டிவிட்டு தொழிலில் இறங்கியுள்ளார். முதலில் ஒரு பத்து இருக்கை செய்து கொண்டு, மொனறாகலையில் உள்ள அரசு காரியாலயங்கள், வாகனச்சாரதிகள் என வியாபாரத்தை வீடு வீடாக, ஊர் ஊராக தொடங்கி இன்று நந்திக ஒரு பிரபல்ய வியாபரி பிளஸ் எக்ஸ்போட்டர்.

மொனறாகலை புத்தளயில் ஒரு மாளிகை வீடு, அதன் பின்னால் 30 பேர் வேலை செய்யும் 40லட்ச ரூபா பெறுமதியான உலுவரிசி பேக் பெக்டரி, மாதத்துக்கு 20 லட்ச ரூபாவுக்கு ஜப்பானுக்கு ஏற்றுமதி, சிறிலங்காவில் உள்ள அனைத்து ஆர்பிகோ ஷோரூம்களில் இவரது தயாரிப்புகளின் அணிவரிசை என முன்னேறியுள்ளது மட்டுமல்லாது, 2005ம் ஆண்டுக்கான ஏற்றுமதியாளர் அவார்டையும் திரு.நந்திக தட்டிக் கொண்டுள்ளார். இரண்டாவது படத்தில் உள்ளவைகள் அவரது தயாரிப்புகள். நமது மேன்மை தங்கிய ஜனாதிபதியும் இவரது உலுவரிசி ( உலுஹால் பேக்) பேக்கை பாவிக்கின்றார் என்பதும் ஒரு கொசுறுச் செய்தி.


அரசியல் பேசுவோர் பேசிக்கொண்டிருக்கட்டும். நாம் நமது சொந்தக்காலில் நிற்கப்பழகினால்தான் எதிர்கால வடக்கை சிங்கப்பூரையும் விட ஒரு படி மேலே நிறுத்தலாம். கிட்டத்தட்ட முப்பது வருடம் அடுத்தவன் புத்தியை கேட்டு வளர்ந்து விட்டோம். இனியாவது கொஞ்சம் சொந்தப்புத்தியில் வாழப்பழகுவோம். கொழும்பிலும், கண்டியிலும் காய்கறி, மீன்களின் விலைகள் பாதியாக குறைந்துவிட்டன. காரணம் வடக்கில் இருந்து பொருட்கள் வரத்தொடங்கிவிட்டன என சிங்கள் கிராமப்புறத்தான் பெருமையுடன் சொல்கின்றான். தளபாட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கூடிவிட்டது. கேட்டால் வடக்கில் இருந்து ஓடர்கள் வரத்தொடங்கிவிட்டன என வியாபாரிகள் சேர்ட்கொலரை தூக்கிப் போட்டுக்கொண்டு சொல்கின்றனர்.

இதில் முழுக்க முழுக்க இலாபம் உழைக்க வேண்டியவர்கள் வடமாகாணத் தமிழர்களே. எது எதுக்கெல்லாமோ பாவித்த உங்கள் மூளைகளை பிளீஸ் வடக்கின் வசந்தத்துக்காகவும் கொஞ்சம் பாவியுங்களேன். மீன்பிடி, கால்நடை, கட்டுமானம், வீதி அபிவிருத்தி, நீர்வழங்கல் என ஆயிரம் தேவைகளுடன் அரசு அலைந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்நாடுகளில் எத்தனையோ நவீன கருவிகளும், இயந்திரங்களும் உங்கள் காலடிகளில் கொட்டிக்கிடக்கின்றது. ஏன் இவைகளில் முதலிட்டு ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உங்களால் முடியாதா. எங்கோ குருநாகலையில் உள்ள ஒருவர் வவுனியாவில் பாரிய கல்உடைக்கும் இயந்திரம் (மூன்று கோடி ரூபா) நிறுவும் முயற்சியிலும், அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் மாங்குளத்தில் சீமென்து கற்கள் செய்யும் இயந்திரங்களை (எட்டு கோடி ரூபா ) நிறுவும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். ஏன் இதை உங்களால் செய்ய முடியாதா.

அந்த புனிதர்கள் முகாம்களில் உள்ள ஒவ்வொரு புனிதர்களின் முகம்களும் ஓராயிரம் கதை சொல்லுகின்றது. யாழ்ப்பாணத் தமிழ் மக்களே. அதை எழுத்தில் வடிக்க முடியாது உறவுகளே. வடித்தால் இதயங்கள் வெடித்துவிடும். அவர்களின் அந்த பூப்போன்ற மெத்தென்ற இதயங்களுக்கு பொல்லெறியாமல் அன்பெறிந்து, அவ்விதயங்களை கொள்ளை கொள்ளுங்கள். அப்பகுதிகளில் நிறைய முதலிட்டு செய்த கொஞ்ச நஞ்ச பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுங்கள் உறவுகளே. இங்கு வடக்கில் முதலிட கொரியாக்காறனும், இந்தியர்களும் கொழும்பில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். நாமும் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நிரூபியுங்கள் சகோதரர்களே.

எனது மாடு வளர்ப்பு கட்டுரையை பார்த்துவிட்டு ஆறு வாசகர்கள் தலவாக்கொல்லை, நுவரெலியா போன்ற பகுதிகளில் மாடுவாங்கி வளர்க்க ஆரம்பித்து விட்டதாக எழுதி இருந்தனர். வாசகர்களே நானே ஒரு சோத்து மாடு என்ற கதையை கேட்டு தொழில் தொடங்கியதற்கு நன்றி. ஆனாலும் நீங்கள் மாடு வாங்க வேண்டிய இடம், கால்நடை அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நாரஹேன்பிட்டி. எட்டு லட்ச ரூபாவுக்கு ஆறு மாடும், இரண்டு வருடத்துக்கு ஆலோசனையும் வழங்குவார்கள். வருட இலாபம் கிட்டத்தட்ட ஒன்பது லட்ச ரூபா. மாடு வளர்த்து சொந்தக்காலில் நிற்க விரும்புபவர்கள், கால்நடைஅபிவிருத்தி கூட்டுத்தாபன தலைமை காரியாலய அதிகாரி திரு. எம்.டி. கருணாதிலகவை ( 0094 112 369804 அல்லது 0094 77 3782128 ) வேலை நாட்களில் தொடர்புகொண்டு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.
Thanks www.thenee.com


Comments

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME