இனி நமது சொந்தக்காலில் நிற்போம்.

– யஹியா வாஸித்- ( கொழும்பிலிருந்து )

(பாகம் – 6)

காதலியாம் குண்டலமும், கையோடு வளையதுவும், காதலியும், மேகலையும், மணம் கமழும் ஓர் மணியும், ஓதுவார்க்கு மறையுணர்த்தும், ஒப்பரிய முத்தமிழும், பேதமுற, பொதிந்தாங்கே, அந்த வன்னியிலே கிடக்கையிலே, ஏதெனக்கு வார்த்தை எக்காலத்திலும் எழும்பிவர, இருந்தாலும் எழுந்து வந்து, எம்தமிழர், எம் இரத்தம், எம்முறவு எழும்பி வர, ஏதோ ஒரு வழியில் எழும்பிவர, நம்மாலான முயற்சியிது. பந்தயத்தில் ஓடவிடப்படும் குதிரைகளாக இன்று மொத்த தமிழ்பேசும் இனமும்......... இனி தமிழுக்கு, மறத்தமிழுக்கு யார் மணிகட்டுவது. மொத்தத்தையும் மொத்தமாக தாரைவார்த்துவிட்டு, இப்போ அதற்காகத் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம் நாம்.
More...ஆனால் இங்கு கொழும்பு எப்போதும் போல் சுறுசுறுப்பாகத்தான் இருக்கின்றது. கண்டி அலிமுடுக்கில் புங்குடுதீவாரும், மானிப்பாய் காறர்களும் ரொம்ப பிஸியாக வியாபாரத்தில் கண்ணும்கருத்துமாகத்தான் இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தி, சாவகச்சேரி நாள்சந்தை, கொழும்பு இரண்டாம் குறுக்குத்தெரு, மெட்ராஸ் பாண்டி பஜார், பம்பாய் தாராவி எப்படி பிஸியாக இருக்குமோ, அதைவிட 100 மடங்கு பிஸியாக இந்த கண்டி அலிமுடுக்கு இருக்கின்றது. இங்கு இன்னும் இன்றும் சிவா றேடர்சிலும், லுக்சானா றேடர்சிலும் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கின்றது. மொத்த சிங்கள வியாபாரிகளுடனும், முஸ்லீம் வியாபாரிகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர்.

சன்லைட் ஒரு டசின் புங்குடுதீவாரிடம் 300 ரூபா, மற்றவர்களிடம் 312 ரூபா, அங்கர் 75 கிராம் பால்பக்கற் இவர்களிடம் ஒருடசினுக்கு 594 ரூபா, மற்றவர்களிடம் 612 ரூபா. இந்த அளவுக்கு வியாபாரத்தில் கொடிகட்டிப்பறக்கும் வடக்கு மக்கள், அரசியலில் எங்கே கோட்டை விட்டார்கள் என்பதுதான் இங்கே புரியாத புதிராக இருக்கின்றது. வியாபாரத்தில் ஆரோக்கியமான வியாபாரப் போட்டிதானே நடக்கும், அரசியலில் அப்படியா, ஆ ஊ என்றால் எல்லோருமே தண்டல்காறர்களாகி விடுகின்றனர். நாம் வியாபாரத்திலேயே கண்ணாக இருப்போம்.

ஆனால் இம்முறை அரசாங்கத்தையும் அரச நிர்வாகத்தையும் கொஞ்சம் திட்டத்தான் வேண்டியுள்ளது. யுத்தத்தில் வென்றால் மட்டும் போதுமா. அன்றாடங்காய்ச்சிகளுக்கு உருப்படியாக ஏதாவது போதிக்க வேண்டாமா. நமது நாடும், நமது மக்களும் என்ன மண்டையில சரக்கில்லாதவர்களா. நாடு ஐந்து வருடத்தில் சிங்கப்பூராக மாறவேண்டுமானால் எல்லோருக்கும் எல்லோமும் தெரியவேண்டும். ஆனால் நிறைய விடையங்கள் காதும் காதும் வைத்தமாதிரி, பழைய உண்டு பெருத்த பெருச்சாளிகளின் கையிலேயே உலாவுகின்றது. அப்படியானால் புதியவர்கள் எவ்வாறு வருவது, எவ்வாறு முதலிடுவது.

யாழ்ப்பாணத்துக்கு வண்டிகள் புறப்பட்டுவிட்டது என்றதும், கோழி முட்டை விலை கிடுகிடு என ஏறிவிட்டது. 10 ரூபா விற்ற கோழி முட்டை 14ரூபா. ஒரு நாள் கோழிக்குஞ்சு 60ரூபா. அதற்கும் பயங்கர கியூ. கோழிக்குஞ்சு வியாபாரத்தில் சி.ஐ.சி, பிறிமா, கிறிஸ்போ என்பன கொடிகட்டிப் பறக்கின்றது. கோழிக்குஞ்சு 1000 எடுப்பதானால், ஒருமாதத்துக்கு முன்னரே முற்பணம் வழங்க வேண்டியுள்ளது. புதிய கோழிப்பண்ணை திறக்கப் போகின்றோம், முட்டையிடும் லேயர் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்யப் போகின்றோம் என்று சொல்பவர்களுக்கு, இங்கு யாருமே வழிகாட்டவில்லை. ஏன் மற்றவர்கள் இவ்வியாபாரத்தில் ஈடுபடக்கூடாதா.

சிறிலங்கா உறுண்டைகிழங்கு கிலோ 120 ரூபா, ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உறுண்டைகிழங்கு கிலோ 70 ரூபா. சூப்பர் பொருளாதாரக்கொள்கை. அட சிறிலங்கா உறுண்டைக்கிழங்கு உற்பத்தியாளர்களே, நீங்கள் உங்கள் கிழங்கை விற்கவே கூடாது என்று அவர்களது செவிட்டில் அறைந்ததுபோல் திட்டம் வகுத்துள்ளார்கள். இந்த பொருளாதாரக் கொள்கை யாருக்காக. அதே உண்டு கொழுத்தவர்களுக்காகவா.

சிறிலங்காவில் புத்தளத்திலும், ஹம்மாந்தோட்டையிலும்தான் உப்பு விளைகின்றது. இது எமது தேவைக்கு போதாது எனக் கூறிக்கொண்டு உப்பை பெருமளவு இறக்குமதி செய்கின்றோம். ஆனால் கிழக்கில் பாணமையிலிருந்து 13 மைல் தொலைவில் வருடா வருடம் பல ஆயிரம் ஏக்கர்களில் உப்பு விளைந்து நீரில் கரைந்து கொண்டிருக்கின்றது. இந்த உப்பை எடுக்க பல பேர் முயற்சிசெய்தும், என்வயர்மென்டல் ஹெல்த் மினிஸ்றி ஏன் தடை விதித்துக்கொண்டிருக்கின்றது. ஏன் இதை கிழக்குமாகாண முதலமைச்சரும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வோரும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். வெளிநாட்டுக்காறரின் உப்புத்தான் செரிக்குமா, ஏன் கிழக்குமண் செரிக்காதா.

வன்னியில் ஒரு வீடு 5000 டொலர் ( ஐந்துலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா ) செலவில் கட்டித்தருகின்றொம், எனக்கூறிக் கொண்டுவந்த ஒரு கொரியன் கம்பனியிடம், பெரியதொரு பேரம் பேசப்பட்டுள்ளதாமே. ஏன். இதே வீட்டை 4000 டொலர் செலவில் கட்டித்தருகின்றோம் என்ற சிறிலங்கன் முதலீட்டாளர்களும் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளார்களே. ஏன்.

ஒலுவில் ஹாபர் புறஜக்ட்டை குத்தகைக்கு எடுத்துள்ள டென்மார்க் கம்பனிக்கு 6000 மில்லியன் மெற்றிக் தொன் கருங்கல் தேவை என்பது ஊரறிந்த விடயம். ஆனால் அந்த கருங்கல் வழங்கும் உரிமையை எந்த மட்டக்களப்பானுக்கும் கொடுக்காமல், ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருவருக்கு கொடுக்க முயற்சி எடுப்பது உண்மையா.

மத்திய மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் குடிதண்ணீருக்கு மக்கள் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எல்லாக்கிராமங்களிலும் கொக்கா கோலாவும், எலிபன்ற் சோடாவும் தாராளமாகக் கிடைக்கின்றது. இது எப்படி. அவர்களுக்கு மட்டும் குடிதண்ணீர் எப்படி கிடைக்கின்றது.

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எப்போதும் போல் ஆசீர்வதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களது வரவு நூறணா, செலவு பத்தணா, பாதுகாக்கப்பட்டவர்கள், கையைக் கட்டி வாயைக்கட்டி வரவு எட்டணா, செலவு ஏழரையணா என காலத்தை ஓட்டுகின்றனர், தண்டிக்கப்பட்டவர்கள், ஒரு பாவமும் அறியாமல் தண்டிக்கப்பட்டவர்கள், இன்னமும் வன்னியிலும், மலையகத்திலும், கொழும்பு சேரிகளிலும், நேற்று பெய்த மழைக்கு காட்போர்ட் மட்டைகளால் கூரைகளை அடைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் சொந்தக் காலில் நிற்க எதையோ ஒன்றை அரசிடம் எதிர்பார்க்கின்றனர். அது.

விலை பேசப்படாத கல்வி
விற்கப்படாத அறிவு
அடகு வைக்கப்படாத ஓட்டுரிமை
உள்ளதை செய்யும் ஆட்சியோர்
நல்லதை செய்யும் ஆளத்துடிப்போர்
கறை வேலிக்குப் படியாத சட்டம்
காசுக்குப் பணியாத நீதி
அன்னியனிடம் கையேந்தாத அரசு
புலமைக்காக புலமை விடுத்து
நாட்டின் வளர்ச்சிக்காக புலமை

அரசை கைபிடித்து வழிநடக்க மக்கள் தயார்
மக்களை கை கொடுத்து வழி நடாத்த அரசு தயாரா.

( முற்றும் )
12-7-2009
Thanks www.thenee.com

Comments

Popular posts from this blog

இணையத் தணிக்கைகளும் தீர்வுகளும் - #டவுட்டுகள்

அத்தாட்சிகள்

மதங்களும் நம்பிக்கைகளும்