Nasi Lemak–Farewell 2010 Part 2
கடைசியாக ஊருலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் திருப்திகரமாக இல்லை. மழை, வெள்ளம், மீண்டும் மக்கள் இடம்பெயர்வு, ஏக்கர் கணக்கில் பயிர்கள் நாசம், அடுத்து நோய்கள் என்று இந்த தசாப்தமும் இந்த கொடுமை தொடர்கிறது. இங்குள்ள பிரச்சினை வருட இறுதி மழையல்ல. இது ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்பதும் வேண்டி நிற்பதும்தான். இருப்பினும் இதற்கான ஒழுங்குகளை செய்யாமல் வெள்ள நிவாரணங்களும் சமைத்த உணவுகளும் ஒவ்வொரு வருடமும் வழங்கிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோசனமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. தனிப்பட்ட சிலரின் அரசியல் இலாபங்களாலும் குரூர மனம் படைத்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள இனவாதிகளாலும் எல்லா இன, தரப்பு மக்களும் பலிக்கடாவாகிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களாலேயே இந்த பாதிப்புகள் தொடர்கின்றன. அடுத்த தசாப்தம் வரை பொறுத்திருப்போம் இறைவன் நாடினால் இதற்கான தீர்ப்புகள் வெகு விரைவில் வரலாம். வீட்ட பேசும்போது உம்மா கேட்டாங்க “ அங்கெல்லாம் இப்படி மழை பெய்வதில்லையா??” என்று இங்கு வருடம் முழுவதும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்வது என்ன… ஊற்றுகிறது.. இங்கு ஊற்றுவது போல் அங்கு ஊற்றுமானால் பத்து நாட்களில் ஊரே காணாமல் போய்விடும்.. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்கள் எப்படியோ தெரியாது. ஆனால் எது செய்யணுமோ அதை செய்து விடுகிறார்கள்… அதையும் தாண்டி இங்கு சில இடங்களில் வரும் வெள்ளப்பெருக்குக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஒரு பாமரனாக எல்லா மட்ட, எல்லா வரைட்டி அரசியல்வாதிகளுக்கும் இந்த தசாப்தத்தில் நான் (பாமரன்) வைக்கும் கோரிக்கை இதுதான்.. ஐயாமாரே!! ராசாக்களே!! ஒங்கள விட்டா உலகத்துல அடிக்க ஆளில்லாத தத்துவவாதிகளே, திட்டமிடுபவர்களே, “எங்கள் ஊரில் இந்த கழிவகற்றல் என்ற சமாச்சாரம் பெரிய சீரழிவாக மாறிக்கொண்டு வருகிறது. வெள்ளம் வந்தா கேட்கவே வேண்டாம். ராசாமாரே .. அது என்னமோ கழிவுகளை நடுக்கடலில் கொட்டும் சிஸ்டம் ஒண்டு இருக்காமே!! அத செஞ்சுதான் பாருங்களேன். ஏனென்டா அவதார் படம் 90 களில் எடுக்க சாத்தியமில்லாமல் போய் இந்த பத்துகளில் எடுத்துட்டாக.. நீங்க அடுத்த பத்திலாவது இத செய்ய ஏலுமா எண்டு பாருங்க… அல்லது புதுசா என்னமும் வந்திருக்கும் அதாவது ட்ரை பண்ணி பாக்கலாம். ஏனென்டா நம்முட ஊரு போற போக்குக்கு நமக்கு அடுத்த பத்து, கடைசிப் பத்தாக கூட இருக்கலாம்..வருத்தம் வந்தா கூட்டம் கூட்டமாக கொண்டுபோய் புதைக்கிற அளவுக்கு வரலாம்..அல்லாஹ் காப்பாற்றட்டும்.”
இறுதியாக இந்த தசாப்தத்திலும் சரி போன தசாப்தத்திலும் சரி… மனிதன் கண்ட அடைவுகள் சாதனைகள் பெற்ற அனைத்து வகையான புகழ்களும் சர்வ வல்லமை பொருந்தியவனான இறைவனுக்கே உரியது. ஒவ்வொரு கணப்பொழுதுகளின் இரகசியங்களுக்கும் மாற்றங்களுக்கும் அவனே சொந்தக்காரன்.. வாழ்வின் அனைத்து வழிகாட்டல்களும் அவன் நாடியவாறே நடந்தேறுகின்றன. இன்பம் , துன்பம், தோல்வி, ஏமாற்றம், வெற்றி, பணம், புகழ்,அந்தஸ்து, முக்கியமாக அறிவு எல்லாம் அவன் முன்னே பெறுமதியற்றதாக குறுகிப்போய் வலுவிழக்கின்றன.
அடுத்த பகுதியில் புதிய தசாப்தத்தில் ரேட்டிங்ல என்னென்ன மாற்றங்கள் வரலாம் என்று பார்ப்போம்..
(தொடரும்)
Comments
Post a Comment