Nasi Lemak – Lost & Found

தொலைந்தேன்

 

image

     “தொலைதல்” என்பது எனக்கும் என்னால் என் நண்பர்களுக்கும் பழகிப்போன ஒன்று. இருப்பினும் இம்முறை கொஞ்சம் ஆழமாகவே தொலைந்தேன் போன்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையில் வேலை நிமித்தம் தொலைந்தேன் என்பது ஒரு காரண சாக்குதான். வேலை என்பதைவிட மனம் இம்முறை எதிலும் ஒட்டாமல் வேறெங்கோ சென்று கொண்டிருந்தது என்பதே உண்மை. உண்மையான காரணம் இதுவரை புரியவில்லை. ஆனால் குறிப்பிடும்படியாக சில உள.

1. எனது இறுதியாண்டு செயற்திட்டம்.

2. தூக்கமின்மையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு.

3. எனது அருமை கைத்தொலைபேசி பழுதடைந்தமை.

 

இருப்பினும் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு தனிமை தேவைப்பட்டது. அதுவே முழுமுதற்காரணம். மிக நெருங்கிய நண்பர்களிடம் இருந்தும் விலகி இருந்ததும் இதுவே முதற்தடவை.

 

resized_P3140533

செயற்திட்டம் நினைத்ததை விடவும் சிறப்பாக முடிவடைந்தமை தொலைந்தமைக்கு கிடைத்த பரிசு. முதன்முறையாக இங்கு மருத்துவமனை செல்லவேண்டி ஏற்பட்டதும் கலங்கித்தான் போனேன். என்னில் அக்கறை செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். ஏறத்தாழ 500 பேரின் தொடர்புகளுடன் எனது கைத்தொலைபேசி பழுதடைந்தமை ஈடுசெய்ய முடியாத இழப்பாக போய்விட்டது. இன்று புதிய கைத்தொலைபேசி ஒன்று வாங்கி விட்டாலும் பழையது போன்று வருமா என்பது சந்தேகமே. அதில் பல  உயிரோட்டமான நினைவுகளும் பதிவாகி இருந்தன.

 

கணையாழி

image   மிக நீண்ட நாட்களாக மோதிரம் அணிய வேண்டும் என்ற ஒரு தீராத ஆசை எனக்கு. நண்பர் முனீர் வசம் இருந்து ஒரு மோதிரத்தை இங்கு வரும் முன் சுட்டு விட்டேன். சென்றமுறை இலங்கை சென்றபோது நண்பர் ரசூல்சா கடைசியாக கழற்றி பார்த்துவிட்டு தந்த ஞாபகம் எங்கோ வைத்து விட்டேன். தொலைந்து விட்டது. வெறும் விரலுடன் வந்து சேர்ந்தேன். கடந்த வாரம் ஒரு மோதிரம் வாங்கக் கிடைத்தது. அதுவும் என் பெயர் பொறித்து.. தலைகால் புரியாத சந்தோசம் எனக்கு. திடீரென சுட்டுவிரலில் அணியும் ஆசையும் ஏற்பட்டது. சில “பகிர மறந்த கதைகளின்” அடையாளமே இப்போது இந்தக் கணையாழி எனக்கு. விலை என்னவோ அதிகமில்லைதான். அது சுமந்திருக்கும் நினைவுகள் அதிகம். தொலைந்ததை கண்டுபிடித்த சந்தோசம் இப்போது..

 

ஜப்பான்  

“இந்த நாட்டுக்கு அழிவு அழிவு அழிவுதான்" என்றே என் நண்பர்கள் உளறிக் கொண்டிருந்தார்கள். ஜப்பான் அழிவுக்கு மட்டும் பெயர் போன நாடு அல்ல. அதிலிருந்து மீண்டு வருவது எப்படி? என்று உலகுக்கு கற்பித்த நாடு. இழப்புகளை கண்டு கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதை விடவும் அதிலிருந்து மீளெளவும் எதிர் கொள்ளவும் தயாராக இருப்பதை பார்க்கையில் நாமெல்லாம் என்ன “…” செய்து கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றியது.

japan

 

கஸ்தூரி

என்னோடு அலுவலகத்தில் கடமை புரிந்த சக நண்பி ,சகோதரி,  ஆசிரியை, Irfansky யினது வாசகி , விமர்சகி என்று பல பரிமாணங்களை கொண்டவர். திடீரென வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவருக்கு ஆசிரியையாக இருப்பதே பிடிக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பிரிவும் இழப்பும்  எனக்கு “இரு கோடுகள் விதி" போன்றது “பழகிப் போச்சுங்க..” கஸ்தூரி இறுதி நாளன்று அழுதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கஸ்தூரியின் இரு வரங்களை என்னால் கொடுக்கவே முடியாமல் போய்விட்டது. 

ஒன்று…

Irfan if cn pls check d price of compaq laptop adopter – Kasthuri-  சொல்லிச் சொல்லி வாய் வலித்து நான் ஒரு அசாத்திய மறதிக்காரன் என்று தெரிந்து கஸ்தூரி கடைசியாக எனக்கு அனுப்பிய sms.  I am sorry Kass !! “பிறகு பார்க்கலாம்” என்ற எனது அலட்சியமே இதற்கு காரணம். இன்று புது கைத்தொலைபேசியில் SMS Inbox இனை பார்த்தபோது தூக்கிவாரிப் போட்டது எனக்கு. “அடடா மறந்திட்டமே” என்று.

இரண்டு…

எனது மேற்சொன்ன கணையாழி.  கஸ்தூரி என்னிடம் நினைவாக கேட்டிருக்கலாம். ஆனால் பகிர முடியாத அளவுக்கு சில விடயங்கள் அதில் பதிந்து போய் உள்ளன. அதுதான் என்னைத் தடுத்தது. இந்தக் கணையாழி இந்தளவு மதிப்புப் பெறும் என்று நினைத்து நான் வாங்கவே இல்லை. இதுவும் நிரந்தரம் இல்லை என்பது எனக்குத் தெரியாமலும் இல்லை.

என்றும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..

 

மேகத்தின் திணிவு கர்வம் தொலைந்தது..

  sun-clouds

ஒவ்வொரு தடவையும் விமானங்களை பார்க்கையில் ஆச்சரியப்படுவேன் இவ்வளவு நிறையுடன் வானில் ஜிவ்வென்று பறந்து செல்கிறதே என்று.. உள்ளுக்குள் இருக்கும்போது நடுங்குவது வேறுவிடயம். மனிதனது ஆற்றலை நினைத்து கர்வம் கூட ஏற்படும் சிலவேளை.. சமீபமாக ஒரு மேகத்திரளின் திணிவு எவ்வளவு இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது.. தேடியதில் பல பல கருத்துகள் வந்தன. ஒரு சாதாரண மழைமுகில் 1600 தொன் தொடக்கம் 4000 தொன் வரையில் திணிவை கொண்டிருக்குமாம். ஒரு தொன் ஆயிரம் கிலோகிராம் ஆகும். அப்படியாயின் இவ்வளவு நிறையை எந்திர வலு இல்லாமல் துல்லியமாக நகர்த்திச் சென்று மழையை பொழியச் செய்யும்படி படைத்தவன் எவ்வளவு ஆற்றல கொண்டவனாக இருத்தல் வேண்டும்?. எல்லாப் புகழும் சகல உலக இரட்சகனான அல்லாஹ்வுக்கேயுரியது.

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்)மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)


(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள்மீது விழும்படி செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன்: 24:43)

 

காத்த நகரின் ஒற்றுமை

ஒரு சிறு தேர்தலுக்கு முன்னால் எங்கள் ஒற்றுமை தொலைந்தழிந்து போனது.. அரசியல் ஒரு பருவ கால வியாபாரம் அதன் முன்னால் எங்கள் அனைத்து முயற்சியும் செயலிழந்துதான் போகிறது என்பதை எங்கள் ஊர் காலாகாலமாக நிரூபித்துக் கொண்டேவருகிறது. இங்கு பிழை எல்லோர் பக்கமும்தான் என்ற நியாயத்தால் மாத்திரம் எம்மால் திருப்திப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. அரசியல், மற்ற சகோதரரின் பிறப்பில் சந்தேகம் கொள்ளுமளவிற்கும் அதனை நாக்கூசாமல் விமர்சிக்கும் அளவிற்கும் எம்மை மாற்றுகிறதென்றால் நாம் என்ன முன்மாதிரிச் சமூகம்? பண்பாடுகள் அற்ற ஒரு சமூகத்தில் பாரிய கட்டிடங்களாலும் வீதித்தோரணங்களாலும் என்ன பயன் இருத்தல் முடியும்? பண்பாடுகளை விற்றுத்தான் ஒரு சமூகத்தில் அபிவிருத்தி பேசலாம் எனில் அல்லது வெல்லலாம் எனில் மேற்கிற்கும் எமக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?.

மனச்சாட்சிகளை விற்றுவிட்டு சுய இலாபங்களுக்காகவும் தமது பெயர்தக்கவைப்புகளுக்காகவும் எத்தனை நகர்வுகள், சேர்வுகள், கோமாளித்தனங்கள், அடாவடித்தனங்கள்?. இதனை விடவும் உண்மைகள் தெரிந்தும் தனிப்பட்ட விரோதங்களுக்காக நாம் எவ்வளவு தவறுகளை விட்டிருக்கிறோம். இறைவனது வசனங்களை எதுவித அச்சமுமின்றி எவ்வளவு மிடுக்காக உபயோகித்திருக்கிறோம்?.  எங்கள் கண்முன்னாலேயே எவ்வளவு அழிவுகளையும் சோதனைகளையும் பார்த்து அனுபவித்ததன் பின்னரும் நம் சமூகம் கண்மூடித்தனமாக இருப்பதன் காரணம்தான் என்ன?  இறைவன் எங்களை மன்னிக்க இறைஞ்சுவோம்..

 

Google Chrome 11 beta new logo

தொலைத்தது

image

 

பெற்றது

image

எனக்கென்னமோ தொலைந்ததில்தான் சந்தோசமாக இருக்கிறது.

ஏதோவொன்றில் என் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறேன்…

Comments

  1. அருமையான ஆக்கங்கள். வார்தைகளில் மாத்திரம் வாழ்த்துகள் சொல்ல நான் விரும்பவில்லை. இது இன்னுமொரு வைரமுத்திற்கான முயற்ச்சி என்று எண்ணத்தோன்றுகின்றது. வரவேற்கின்றேன் அருமையா முயற்ச்சிகளை...... என்றும் ஸா..

    ReplyDelete
  2. இது எந்த "ஸா" என்று தெரியவில்லை. நம்ம ரசூல்ஷா என்று எண்ணிக்கொண்டவனாக..."வைரமும் இல்லை முத்தும் இல்லை.. யாரை யாருக்கு ஒப்பிடுவது என்று ஒரு அளவு வேண்டாம்??" எப்படியோ ஒரு அருமையான கமெண்ட் இற்கும் facebook பகிர்வுக்கும் ஆயிரம் நன்றிகள்..ஷா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல்நாசர் நினைவுகள்

August 03, 1990

Type in Tamil - Google IME