அராபிய வசந்தமும், இயற்கையின் சீற்றமும்
கே.என். ராமசந்திரன்
சில அரபு நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட மக்கள் புரட்சிகளைச் சர்வாதிகார ஆட்சிகளைக் கவிழ்த்து ஜனநாயக ஆட்சிகளை நிறுவுவதற்காக மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் போராட்டம் என்றே அமெரிக்காவும் மற்ற மேலை நாடுகளும் சித்திரித்து வருகின்றன. ஆனால், கலீபாக்களின் காலத்திலிருந்தே மேற்காசியர்கள் ஒரு வலுமிக்க மன்னர் அல்லது சர்வாதிகாரியின் ஆதிக்கத்துக்குப் பணிந்து, தாமுண்டு தம் ஒட்டகங்களுண்டு என்று அடக்கமாக இருக்கப் பழகி விட்டவர்கள் என்றும் தற்போதைய எழுச்சிகளுக்கு ஜனநாயக விழிப்புணர்வு காரணம் என்பதைவிடச் சுற்றுச்சூழல் பிரச்னைகள்தான் காரணம் என்பதே பொருத்தம் என்றும் அப்தல் அஸலம் என்ற அராபியச் சமூகவியலார் கூறுகிறார்.
டுனீசியாவில் உணவுப்பொருள்களின் பற்றாக்குறையும் விலை உயர்வும் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு நடைபாதைப் பழ வியாபாரியிடம் உணவுப் பொருள்களை விற்க அனுமதி இல்லை என்று சொல்லி அவனைப் போலீஸ் துன்புறுத்த, அவன் மனமுடைந்து தீக்குளிக்கப் புரட்சி வெடித்தது.
சிரியாவின் தென்பகுதியிலுள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றான டாரா என்னுமிடத்தில் ஏழை விவசாயிகள் நிலங்களை வாங்கவும் விற்கவும் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் லஞ்சம் தர வேண்டியிருந்தது. சிரியப் புரட்சியும் அங்குதான் தொடங்கியது.
ஜனத்தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, வானிலை விபத்துகள் போன்றவற்றின் அழுத்தமும் இறுக்கமும்தான் மக்களைப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. நீர், நிலம், உணவு ஆகியவற்றின் மேலான உரிமைகள் பறிக்கப்பட்டபோது அவர்கள் பொங்கியெழுந்தனர். அரசியல் அல்லது பொருளாதாரக் காரணங்கள் இரண்டாம்பட்சம்தான்.
சிரியாவில் கடந்த சில ஆண்டுகளில் சமூக, பொருளாதார நிலைகளிலும், சுற்றுச்சூழலிலும், வானிலையிலும் கணிசமான சேதங்கள் ஏற்பட்டன. அதிபர் அஸத்துக்கு வெளியுலக நிலவரங்கள் தெரியாது. தனக்காகவும் புரியாது, பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார். அரசுக்கும் மக்களுக்குமிடையிலான உறவு குலைந்துபோது அவர் தன் படைகளை ஏவித் தன் மக்களையே கொல்லத் தயங்கவில்லை.
2006 முதல் 2011 வரை சிரியாவின் விவசாயப் பகுதியான வடகிழக்கு மாகாணங்கள் கடும் வறட்சியால் பீடிக்கப்பட்டன. பயிர் விளைச்சல் கால் பங்காகக் குறைந்தது. 85 சதவிகிதக் கால்நடைகள் மரித்தன. ஏறத்தாழ எட்டு லட்சம் விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வேலைக்கு அலைந்தனர். தேவையான உள்கட்டமைப்பின்றி நொண்டியடித்துக் கொண்டிருந்த நகராட்சிகள் இந்தக் கூடுதல் சுமையைத் தாங்க முடியாமல் படுத்து விட்டன.
இன்று நிலவும் வானிலைக் குலைவுகள் இதே திசையில் தொடருமானால் வட ஆப்பிரிக்காவிலும் மேற்காசியாவிலும் மக்கள் துன்பம் பெருகிக் கலகங்கள் ஏற்படும். ஆட்சியாளர்கள் கடுமையாக மக்களை ஒடுக்கப் படை பலத்தைப் பயன்படுத்துவார்கள். அராஜகம் நிலவும். மேலை நாடுகள் அரபுகளின் ஜனநாயக உணர்வுகளைப் பாராட்டி ஆசீர்வாதம் செய்வதை விட வானிலைக் குலைவுகளை எதிர்கொள்ளக் கூடிய உள்கட்டமைப்புகளையும் நீர் மேலாண்மை அமைப்புகளையும் நிறுவிட உதவுவதே மேலானது. அரபு நாடுகள் தப்பிப் பிழைக்க அது ஒன்றே வழி. அதில் முதலீடு செய்வது மேலை நாடுகளுக்கும் லாபமானது. அரேபியாவிலும் அமைதியான ஜனநாயகம் நிலவும்.
அமெரிக்காவின் கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம், அரபு நாடுகளில் குளிர்காலங்களில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறை மற்றும் வறட்சியின் அளவு வர வர உயர்ந்து கொண்டே போவதாகக் கண்டுபிடித்துள்ளது. மனிதனின் செயல்பாடுகளும் அதற்கு ஓரளவு காரணம். இயற்கையின் இயல்பான ஏற்ற இறக்கங்களையும் மீறி வறட்சிக் காலங்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகமாகி வருகின்றன. இயற்கை தன் இயல்பான நிலைக்கு மீளும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது என மார்ட்டின் ஹுயரிங் என்ற அமெரிக்க ஆய்வர் கூறுகிறார்.
உலகிலேயே கடுமையான நீர்ப்பற்றாக்குறையுள்ள 15 நாடுகளில் 13 மேற்காசியாவில் உள்ளன. அல்ஜீரியா, லிபியா, டூனிசியா, ஜோர்டன், கட்டார், சவூதி அரேபியா, ஏமன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மலிவானது பெட்ரோல். விலை மதிப்பற்றது தண்ணீர். வேகமான மக்கள்தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக வானமும் காற்றும் மண்ணும் கெட்டுக் கிடக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் மேற்காசியாவின் மக்கள்தொகை இளைஞர்கள் மிக்கதாக 132 சதவிகிதம் உயர்ந்து விடும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், வேலைவாய்ப்புகள் உயராது.
20 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறு தோண்டும் துரப்பணங்களைப் பயன்படுத்தித் தரைக்குக் கீழே பெரும் ஆழத்திலிருந்த நீர்நிலை வரை குழாய்களை இறக்கி நீரிறைத்துக் கோதுமை விவசாயம் செய்தனர். நாடு கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாக ஆட்சியாளர்கள் பெருமையடித்துக் கொண்டனர். சில ஆண்டுகளுக்குள் அந்த நீர்நிலை வறண்டது. கோதுமை விவசாயமும் நின்றது. சவூதிகள் சூடானிலும், எத்தியோப்பியாவிலும் நைல் நதி நீரைப் பயன்படுத்தும் விவசாய நிலங்களை வாங்கிப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் நைல் நதி நீரைத் தமது வயல்களுக்கு அதிக அளவில் திருப்பி விட முனைவார்கள். அதன் காரணமாக எகிப்தின் நைல் நதி டெல்டாப் பகுதிகளில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும். இப்போதே அங்கு கடல் மட்டம் உயர்ந்து நிலத்தடி நீருடன் உப்பு நீர் கலக்கத் தொடங்கியுள்ளது.
வானிலை மாற்றங்கள், மக்கள்தொகைப் பெருக்கம், தண்ணீர்ப் பற்றாக்குறை, உண்பொருள் விலையேற்றம், திவாலாகிக் கொண்டிருக்கிற நாடுகள் என உலகில் அமைதியை அழிக்கும் காரணிகள் பெருகி வருகின்றன. இது நீடித்தால் மனிதகுலமே அழிந்து போகலாம். இதைத் தவிர்க்க இன்னும் 20 ஆண்டு அவகாசமே உள்ளது.
மூலம்: தினமணி
நன்றி: தேனீ
Comments
Post a Comment