கண்ணாடி மனங்கள்
அன்றொருநாள்
உடைந்து சிதறிப்போன என் கண்ணாடியிடம்
மன்னிக்க மன்றாடிக் கொண்டிருந்தேன்
கால்களுக்கடியில் சிதறிக் கிடந்த துண்டுகள்
மௌனமாய் சம்மதித்தன
மௌனங்களின் நீளங்கள் அதிகரிக்கவே
மீண்டும் மன்னிப்பை கோரினேன்
சிதறிய கண்ணாடிகளின் ஒன்றுசேர்தலில்
மீண்டுமொருமுறை என் முழு உருவம் காணலாம்
என்ற எண்ணம் பொய்த்துப்போனது
அன்று ஒரு விடயம் கற்றுக்கொண்டேன்
சிதறிய கண்ணாடிகள் ஒட்டிக்கொள்வதில்லை
நம் மன்னிப்புகள் மௌனங்களாக ஏற்கப்பட்டாலும்
நம் தவறுகள் தோன்றாமை ஆகிவிடுவதில்லை
நம் உள்ளங்களும் அப்படித்தான்
அவற்றின் உடைந்த பிணைப்புகளை
ஆத்மார்த்த மன்னிப்புக்கோரல்கள் கூட ஆற்றிவிடுவதில்லை
உடைந்த கண்ணாடித்துண்டுகளில் தெரியும் சிதறிய விம்பங்கள் போல
என் உள்ளமும் அழகிய நினைவுகளை சிதைத்துவிட்டு
காலடியில் சிதறிக் கிடக்கிறது ஒட்டிக்கொள்ளாமல்.
Comments
Post a Comment