மதங்களும் நம்பிக்கைகளும்
“நகைகளைத் திருடும்வரை சிலைகள் என்ன செய்து கொண்டிருந்தனவாம்?” நண்பர் கேட்டார். அவர் ஒரு சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, படித்தவர் இறைவன் மேல் அளவு கடந்த பக்தியுடையவர். இந்தக் கேள்வி மூலம் நண்பர் எதனை நாடுகிறார் என்பது எனக்குத் தெரியாமலுமில்லை. இருப்பினும் இது பல விடயங்களை என்னுள் சிந்திக்க வைத்தது.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு நண்பர் “நம் பள்ளியில் தொழுகையாளிகளைச் சாய்க்கும்போதும் அல்லது நம் பள்ளிகள் தகர்க்கப்படும்போதும் நம் இறைவன் எங்கேயிருந்தான்?” என்று இன்னொரு சமூகத்தினன் கேள்வி எழுப்பும்போது எம்மால் என்ன பதில் கூற முடியும் என்று வினாவெழுப்பினான்.
உண்மைதான் இங்குதான் யாதாகிலும் ஒரு வகையில் இறைநம்பிக்கை கொண்ட நாம் பிரிவினைவாதிகளால் துண்டாடப்படுகிறோம். அவர்களின் ஒரே இலக்கு நம் ஒற்றுமையை பிரிப்பது மட்டுமே. ஏனெனில் மனிதர்களை, சமூகங்களை பிரித்து வைப்பதில் கிடைக்கும் அரசியல் இலாபம் ஒற்றுமைப்படுத்துவதில் கிடைப்பதில்லை. மதங்களோ மனித உள்ளங்களில் ஒற்றுமையை விதைத்துவிட விழைகின்றன. எப்போதெல்லாம் இறை நம்பிக்கை கொண்ட எங்களின் சொற்கள், செயல்கள் ஒற்றுமையை ஒடித்து விடிகின்றனவோ அப்போதே நாமும் ஒரு மதத்தினை பின்பற்றும் இறைநம்பிக்கையாளன் என்று சொல்லும் அருகதையை இழந்துவிடுகிறோம்.
“நண்பரே! மதங்கள் நாம் எதிர்பார்க்கும் அறிவியற் பொறிமுறையில் இயங்குவதில்லை. அவை அறிவியலை பகுதியாக தமக்குள்ளே கொண்டிருந்தாலும் முழுமையாக அறிவியல் தர்க்கங்களுக்கு பதிலளிப்பதில்லை. அவற்றின் சில பல விடயங்கள் நம் அறிவின் எல்லையை மீறி மறைவானவற்றை நம்புகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் தந்துவிடாத சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் நிம்மதியையும் மதங்களே நிலைநாட்டி நிற்கின்றன.”
ஒவ்வொரு மதத்திற்கும் தனி அழகு இருக்கிறது அது அதனை பின்பற்றுபவனை பொறுத்துள்ளதே தவிர நாம் மட்டுமே சரியானவன் என்ற எண்ணக்கரு எம்மை அழிவின் விளிம்புக்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.
எப்போதெல்லாம் சமயமும் சமயமும் மோதிக்கொள்கிறதோ அங்கெல்லாம் தாம் இறைவனை நோக்கியவர்கள் என்ற உண்மையை அவை நினைவில் கொள்ள மறந்து விடுகின்றன.
முட்டாள்தனமான மதவாதிகளைத் தவிர வேறு எவரும் மற்றவர்களின் நம்பிக்கையை கேவலமாகவோ அல்லது மற்ற மதங்களின் புனித சின்னங்களுக்கு சேதம் விளைவிக்க நினைக்கமாட்டார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் ஒரு தாய் மக்களாகிய நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Comments
Post a Comment