இழப்புகள்
மாமி இறையடி சேர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி எனது நினைவலைகளை சிறிது பின்னோக்கி நகர்த்தியது. இன்னார் என்று குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மாமி ஒரு Icon கிடையாது. எனக்குத் தெரிந்த வகையில் தனது வாழ்நாளில் அதிக பொழுதுகளை தனிமையிலே கழித்த ஜீவன் அவர்கள். மாமா ஒரு பொறுப்பற்றவர். அவர்களுக்கு இரு ஆண்பிள்ளைகள். எனக்குத் தெரிந்து மூத்தவனை அவர்கள் வீட்டில் பார்த்ததில்லை. இளையவன் என்கூடவே இருப்பவன். மாமி எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள்.
பெரும்பாலும் நம் உறவினர்கள் நம்மைச் சுற்றி இருப்பார்கள். சிலர் நகரங்களில் குடியேறி இருப்பார்கள். அவர்களிடம் இருந்துதான் நாம் பல நவீனங்களை நாம் கற்றுக்கொள்வோம். என் தாய்வழி உறவுகளில் அநேகர் கிராமத்தில் இருப்பவர்கள். நான் இயல்பிலேயே ஒரு reserved type. யாரிடமும் ஒட்டுவதில்லை. குறிப்பாக உறவினர்களிடம் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை. இருப்பினும் அந்த நாட்களில் மாமி வீட்டுக்குச் செல்வதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. அந்த நேரம் அவர்கள் பாலமுனையில் இருந்தார்கள். வீடு அவர்களுக்கு சொந்தமானதல்ல. வாடகைக்குத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றோ அவர்களுக்கு நிறைய வீடுகளும் காணிகளும் இருக்கின்றன.
டிசம்பர் school விடுமுறைக்கு நானும் சிஹாரும் எப்பாடுபட்டாவது நஜ்மி (மாமி) வீட்டுக்கு சென்றுவிடுவதுண்டு. பாலமுனைக்கு செல்வதென்றால் வீட்டில் கண்டிப்பாக அனுமதி கிடைக்காது. அதிலும் வாப்பா.. ம்ஹூம்… அவருக்குத் தெரியாமல் escape ஆகிவிடுவதுண்டு.
ஒரு ‘ஜனசக்தி’ வீடு.. முன் தாழ்வாரத்தில் ஒரு பகுதியை சமலறையாக பாவிப்பார்கள். மின்சாரம், toilet போன்ற வசதிகளை அங்கு பார்க்க முடியாது. தாழ்வாரம் தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருக்கும். தூங்கும்போது அடிக்கடி மழையில் நனைந்திருக்கிறேன்.
பாடசாலை விடுமுறை மழையோடு ஆரம்பிக்கும். டிசம்பர் மழை பெய்யெனப் பெய்து அவர்களின் வீட்டைச் சுற்றிலும் வெள்ளத்தால் நிறைத்து தாஜ்மஹாலை நினைவுபடுத்தும். நானறிந்து மாமாவுக்கும் மாமிக்கும் கருத்தொற்றுமை இருந்ததில்லை. அவர்களின் வாழ்வில் எவ்வித அர்த்தங்களும் இருந்ததாக இதுவரை தோன்றியதில்லை. எங்கள் குடும்பங்களுக்கும் ஆயிரம் சங்கடங்களும் மனஸ்தாபங்களும் இருக்கும். ஆனால் என்னைக் கண்டுவிட்டாலோ “வாடா மருமகனே!!” என்று புன்னகையுடன் மாமி வரவேற்பார்கள். தலையணை முதல் சாப்பிடும் தட்டு வரை தங்களிடம் உள்ளதில் மிகவும் பெறுமதியானதைக் கொண்டுதான் என்னைக் கவனிப்பார்கள். ஒரு தேநீருடன் நாங்கள் மூவரும் அவருக்கு விடைகொடுத்துவிடுவோம். உச்சபட்சம் நாங்கள் செலவிடும் நேரம் எங்கள் “கேட்போல்" களை சீர்செய்யும் வரையில்தான். அதன் பின் காட்டுக்குள் வேட்டையாட இறங்கிவிடுவோம்.
யுத்தம் தனது கோரப்பிடிக்குள் இலங்கையை வைத்திருந்த சமயமது. மீன்பிடித்தல், அணைகட்டல், தீவைத்தல், பொன்னிவண்டு, குருவிபிடித்தல் என கட்டுப்பாடுகளே இல்லாமல் நேரம் தன்பாட்டில் இதமாகக் கழிந்து கொண்டிருக்கும். இரவில் குப்பி விளக்கிலும் அதில் விழும் விட்டில் பூச்சிகளிலும், இருண்டு கிடக்கும் வானிலும், மதியிலும், தவளைகளின் காதைக்கிழிக்கும் கத்தல்களிலும், பயங்கரமாக எங்களைச் சூழ்ந்து கிடக்கும் அந்த சூழலில்தான் நான் இயற்கை அன்னையின் மொழிகளைப் படித்ததுண்டு. என்னதான் ஏழ்மையானலும் எளிமையானாலும் மாமி வீட்டுச் சாப்பாட்டின் சுவையை யாரும் அடிச்சிக்க முடியாது. அவர்களுது கிராமத்துக் கைப்பக்குவம் அலாதியானது.
கல்வி, தொழில், பொறுப்புகள் என வாழ்வு இயந்திர உலகுக்குள் அடகு வைக்கப்பட்டிருக்கும் இந்த தருணம், சென்ற விடுமுறைக்கு மாமியின் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. “மாமி என்ன கறி” என்றேன்.. “உப்புக்கருவாடும் சிவப்பரிசிச் சோறும்” என்றார்கள். வாங்கிச் சாப்பிட்டேன் சுற்றிநின்ற அனைவர்க்கும் ஆச்சரியம். அலுமினியத் தட்டில் அப்படியொரு சாப்பாடு வாழ்நாளில் சாப்பிட்டிருக்க மாட்டேன்.
இன்று மாமி உயிரோடு இல்லை. அவர்களின் எளிமையான அன்பும் உணவுகளும் என்றும் நெஞ்சைவிட்டு அகலாமல் நினைவில் நிற்கும்.
எல்லாம் வல்ல இறைவன் அவர்கள்பால் இரக்கம் காட்டுவானாக.
nice one
ReplyDeleteMay Allah gives Jannah to her....
ReplyDelete